படுக்கையில் எரிந்த நிலையில் கிடந்த கணவனின் சடலம்..! மரணத்தில் சந்தேகம் – மனைவி மற்றும் மகன் கைது

 

உடவலவ – கொழும்பகே பகுதியில்  உள்ள வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொடி அப்பு எனப்படும் பத்திரனகே அஜித் விஜேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில் இருந்த பொருட்களை கணவர் சேதப்படுத்தியதாகவும், மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் படுக்கையில் கிடந்ததுடன், மெத்தை மற்றும் தலையணை எரிந்து நாசமாகியுள்ளது.

தீயினால் அறை சேதமடையவில்லை எனவும், அறையின் தரையில் லைட்டர், மண்ணெண்ணெய் கொள்கலன் இருந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *