உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகின்றதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“543 தொகுதிகள், 28 மாநிலங்கள், 8 ஒன்றிய பிரதேசங்கள் ஆகியனவற்றை ஊடுருவி சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும், 2 ஆயிரத்து 600 கட்சிகளின் வேட்பாளர்களை கொண்ட உலகின் மிக பிரமாண்ட ஜனநாயகத் தேர்தல் நடவடிக்கையின் மூலம், ஆறு வாரங்களில் ஏழு கட்டங்களில், இந்தியாவின் பல கட்சி ஜனநாயகம் இந்திய ஒன்றியம் என்ற இந்திய அரசாங்கத்தைத் தெரிவு செய்கின்றது.
இலங்கைப் பிரஜை என்ற பெருமையுடனும், மறைக்கப்பட முடியாத இந்திய வம்சாவளி பின்னணியுடனும், இந்திய நாட்டு தேர்தல்களைக் கணிக்கின்ற இலங்கையின் ஒரு ஜனநாயகக் கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தியத் தேர்தல் பிரசாரத்தில் என் மனதை வெகுவாக கவர்ந்த சுலோகம் ஒன்று உண்டு.
அது, “நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள் என்பதற்கு நேரம் எடுத்துச் சிந்தியுங்கள்! சரியாக சிந்தித்து உங்கள் சரியான எம்.பியைத் தெரிவு செய்யுங்கள். ஆனால், தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா? இல்லையா? என ஒருகணமும் சிந்திக்காதீர்கள்! எப்போதும் வாக்களியுங்கள்! அது உங்கள் உரிமை!”. இது இலங்கைக்கும் மிகவும் பொருத்தமான செய்தியைத் தரும் சுலோகம் என எண்ணுகின்றேன்.
மிகச் சிறந்த இந்திய மனங்களால் கட்டியெழுப்பப்பட்டு, நியாயம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் இந்திய ஜனநாயகத்துக்கு எனது பாராட்டுகள்.” – என்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.