இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது. தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது. தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
இந்திய படைக்கு எதிராகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று மட்டக்களப்பினை வந்தடைந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபியில் ஆரம்பமான இந்த நினைவு ஊர்தி இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினை அடைந்தது.
இவரது உண்ணாவிரத மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை அன்னையர் முன்னணி சார்பில் ஆரம்பித்த இவர் சரியாக ஒரு மாதத்தின் பின்னர் ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார்.
இதன்காரணமாக இன்றையதினம் அவர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த இடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நினைவுஊர்தியில் தியாக தீபம் அன்னையின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அன்னை பூபதியின் மகள் சாந்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பின் பல்வேறு இடங்களுக்கு ஊர்திசெல்லவுள்ளதுடன் நாளை பிற்பகல் 04 மணிக்கும் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபிக்கு ஊர்வலமாக செல்லவுள்ளதாகவும் சுரேஸ் தெரிவித்தார்.