சங்கத்தின் அனுமதி இன்றி வழித்தட அனுமதியை வழங்கிய இ.போ.வ அதிகார சபை – கொந்தளிக்கும் காரைநகர் சங்கம்..!

தமது அனுமதி இன்றி பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு 782 வழித்தட அனுமதியை இலங்கை போக்குவரத்து சபையினர் வழங்கியதாக காரைநகர் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டி, இன்றைய தினம் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்

இது குறித்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட குறித்த சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் 32 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றோம். எமது வழித்தட பகுதிக்குள் இல்லாத ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கக் கூடாது என்று எமது யாப்பில் உள்ளது. இது எமது யாப்பில் மட்டுமன்றி எமது வடக்கு மாகாண இணையத்தின் யாப்பிலும் உள்ளது.

இந்நிலையில் எமது வழித்தடத்திற்குள் உள்ளடங்காத அராலி மத்தி பகுதியை சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது அனுமதி இல்லாமல் இவ்வாறு இலங்கை போக்குவரத்து அதிகாரசபை செயற்படுகின்றமை வேதனையளிக்கிறது.

இது குறித்து நாங்கள் ஏற்கனவே இ.போ.வ அதிகாரசபைக்கு தெரியப்படுத்தினோம். இந்நிலையில் குறித்த பேருந்தின் உரிமையாளர் ஆளுநர் செயலகம், இ.போ.ச அதிகார சபை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து எமது சங்கத்தின் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்தாலோசிப்பதற்கு, வடக்கு மாகாண பிரதம செயலாளரிடம் 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தோம். அவரும் அந்த அவகாசத்தை வழங்கினார். ஒரு கூட்டத்தை திடீர் என்று ஏற்பாடு செய்ய முடியாது.  குறைந்தது 14 நாட்கள் தேவை. அதனடிப்படையில் நாங்கள் இவ்வாறு கால அவகாசம் கேட்டோம். ஆனால் இ.போ.ச இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த பேருந்து உரிமையாளருக்கு நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்த நிலையில், எமது வழித்தட பகுதிக்குள் இருக்கும் ஒருவரது பதிவிலேயே பேருந்தினை சேவையில் ஈடுபடுத்தப்போவதாக அவர் ஆரம்பத்தில் கூறினார். ஆனால் தற்போது தங்களது பதிவிலேயே சேவையில் ஈடுபடுத்த முயல்கின்றார். இது எமது யாப்புக்கு முரணானது.

எமக்கும் அந்த பேருந்து உரிமையாளருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட மனஸ்தாபமும் இல்லை. அந்த பேருந்தானது சேவையில் ஈடுபடுமானால் நாங்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம். இதனால் மக்களுக்கான எனது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என்றனர்.

இது குறித்து அந்த பேருந்தின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

இந்த பேருந்துக்கும், வழித்தட அனுமதிக்கும் அதிகளவான நிதியை செலவிட்டுள்ளேன். ஆனால் காரைநகர் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் எமது பேருந்தினை சேவையில் ஈடுபடுத்த விடுகின்றனர் இல்லை.

எமக்கான அனுமதியை இலங்கை போக்குவரத்து அதிகார சபையினர் வழங்கியுள்ளனர். இந்த நடைமுறை குறித்து ஏற்கனவே எமக்கு தெரியாது. எனவே எமக்கு சரியான தீர்வு வேண்டும்  என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *