ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது.. சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல.. நூலாசிரியர் செல்வேந்திரா தெரிவிப்பு..!!

இலங்கையில் தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிய நிலையில் நாம் சிங்களவர்களிடம்  உரிமையை இரந்து கேட்கக் கூடாது என இலங்கையின் கட்டமைப்பான இன அழிப்பும் தமிழ் மக்களின் இனச் சுத்திகரிப்பும் என்ற நூலின் ஆசிரியர் ச. செல்வேந்திரா தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்ற இலங்கையின் கட்டமைப்பான இனவலிப்பும் தமிழ் மக்களின் இன சுத்திகரிப்பு என்ற நூலின் அறிமுக உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இலங்கையில் ஏற்பட்ட சம்பவம் என்னை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென சிந்திக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டிருந்தேன் தற்போது இந்த நூலை இரண்டு வருட முயற்சியின் பயனாக தற்போது வெளியிட்டு வைப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்த நூலை எழுத வேண்டும் என நான் சிந்தித்தபோது இந்த நூல் வருமென தமிழ் மக்களின் அவலங்களை கூறுவது மட்டுமல்லாது ஒரு அரசியல் தலைமையின் வழிநடத்தலில் சர்வதேசம் வரை செல்ல வேண்டும் என விரும்பினேன்.

அதற்காக நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டேன் அவர் நீங்கள் நூலை வழி விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் அதனை நான் வெளியிட்டு வைக்கிறேன் என்றார்.

இந்த நூல் கட்சி சார்ந்தது அல்ல தமிழ் மக்களுக்காக முன் நின்று செயல்படுபவர்கள் இந்த நூலை தமிழ் மக்கள் வாழுகின்ற சகல நாடுகளுக்கும் சர்வதேச ராஜதந்திர மட்டத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமக்கான உரிமையை பெறுவதற்கு  ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய நகர்வுகளை ஒன்று இணைந்து மேற்கொண்டு இருக்க வேண்டும்.

இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்களை கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயம் உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கவில்லை.

இஸ்ரேலுக்காக  தூதர்கள் போராடினார்கள் அவர்களின் ஒன்றிணைந்த பலம்  சர்வதேச நீதியில் பேச வைத்த நிலையில் தமிழ் மக்களின் பலமும் சர்வதேச அரங்கில் எதிரொலிக்க வேண்டும்.

பல இன மக்கள் வாழும் இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் அல்லாமல்  தமிழினம் சிங்களவர்களிடம் இரந்து கேட்கக் கூடாது.

ஒரு இனத்தை பின் நிறுத்தி மற்றைய இனம் அதிகாரத்தை செலுத்துவது ஜனநாயகம் அல்ல.

தமிழினம் சிறந்த கல்வி அறிவு மற்றும் நிபுணத்துவம் இருக்கின்ற நிலையிலும் எமது இனம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை  தொடர்ந்தும் அனுமதிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *