எமது சமூகம் கையேந்தாத சமூகமாக வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை நோக்கி வழிநடத்த தயாராக இருப்பதாகவும் மக்கள் அதனை உறுதிசெய்ய அணிதிரண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து பயனாளர்களுக்கு அரிசி பொதியை வழங்கிவைது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திட்டங்கள் எதுவானாலும் சரி அது வழங்கப்படும் போது சரியானவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுடன் அதற்கு தகுதியற்றவர்களை இனங்கண்டு திட்டத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.
அதேபோன்றுதான் இந்த திட்டத்திலும் அவ்வாறு தவறான தெரிவுகள் இனங்காணப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை எட்ட முடியும். என்றார்.