தீவிரமடையும் முரண்பாடு…! பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படவுள்ள ஆபத்து…!

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை  சீர்செய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்காது என  யாழ் பல்கலைக் கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற  தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்  கலந்து கொண்டு  நினைவுப்பேருரையாற்றும்போதே போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு சென்று நிறுத்தியவர்கள் பொதுமக்களல்லர். எதிரிகளல்லர். விரோதிகளல்லர். கட்சிக்குள்ளிருந்தவர்களே நீதி மன்றத்தில் கொண்டு சென்று நிறுத்தினார்கள்.

கட்சிக்குள்ளிருந்து முரண்பாடுகளையும், பகைமைகளையும், அவாக்களையும் கொண்டிருந்தவர்களும், தங்கள் நலன்கள் சாத்தியப்படவில்லை என்ற எண்ணங்களைக் கொண்டவர்களும்தான் இதற்குக் காரணமானவர்கள்.

இதனைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகளாக தமிழரசுக் கட்சியைக் காப்பதற்காக வீதிக்கு வருதல் வேண்டும். மக்களை அணிதிரட்ட வேண்டும். மக்களுடன் ஒன்றுசேர்ந்து நீதிமன்றத்தின் குற்றச் சாட்டுகளை முடிவுக்குக் கொண்டு வருதல்வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறிதரனும், ஏனைய கட்சி நிர்வாகிகளும் இதனைத் தங்கள் எண்ணமாகக் கொண்டு செயற்படவேண்டும்.

இதன் மூலம் ஈழத்தமிழர்கள் தங்கள் இருப்பில் ஏதாவது மாற்றம் நிகழுமென்ற நம்பிக்கையுடன் புலம்பெயர்வை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான நம்பிக்கைகளுடன் பயணிப்பதற்கானதொரு சூழல் உருவாகும். தமிழரசுக் கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களால் ஏன் இதற்குத் தீர்வு காண முடியவில்லை?, கட்சியின் உறுப்புரிமைக்கு உரித்துடைய ஒவ்வொருவரையும் உங்களால் ஏன் கட்டுப்படுத்திவைத்திருக்க முடியவில்லை? போன்ற பல விமர்சனங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டன.

இந்த விமர்சனங்களைத் தவறானது என்றுகூட நான் கருதமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *