ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இரண்டு மேதினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் (01) பல்வேறு அரசியல் கட்சிகளும் மேதினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இரண்டு இடங்களில் நடைபெறும் இருவேறு கட்சிகளின் மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாளை காலை 10.50 மணியளவில் கொட்டகலையில் நடைபெறும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தினக் கூட்டத்தில் முதலாவதாக கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் நாளை (01) பிற்பகல் கொழும்பு, மாளிகாவத்தை மைதானத்தில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.