தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளிக்கு புகழ் அஞ்சலி -வேலன் சுவாமிகள் அறிக்கை..!!

ஈழ விடுதலைப் பயண வரலாற்றில் தடம் மாறாமல் உயர்ந்த இலட்சியத்துடன் பயணித்த விடுதலைச்செம்மல் ம.க.ஈழவேந்தன் ஐயாவின் மறைவு எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழவேந்தன் ஐயா எமது தேசவிடுதலை வரலாற்றில் ஒர் பீஷ்மராக திகழ்ந்தவர். எமது தேசியத்தின் மீதும் தேசத்தின் மேலும் கொண்ட அசைக்க முடியாத பற்றுறுதியாலும் தனது ஆழ்ந்த புலமையாலும் அறிவாற்றலாலும் சிறந்த பேச்சுவன்மையினாலும் சுமார் 75 ஆண்டுகளாக தேசவிடுதலைக்கு உரமூட்டி வளமூட்டியவர்.

ம.க கனகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட திரு.ஈழவேந்தன் அவர்கள் தனது சிறு பராயத்திலிருந்தே ஈழத்தமிழினத்தின் விடுதலைப்பயணத்தில் தந்தை செல்வாவின் பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டவர். அன்றைய காலத்தில் இன ஒடுக்குமுறைக்கு எதிராக தந்தை செல்வா தலைமையிலான பல அறப்போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

இலங்கை மத்திய வங்கியில் உயர்பதவி வகித்தபோது 1956 ல் ஸ்ரீலங்காவின் பிரதமரான இன வெறியர் பண்டாரநாயக்க அவர்கள் தமிழர்களை ஒடுக்க தனிச்சிங்கள சட்டத்தினை கொண்டுவந்து அனைத்து தமிழ் அரச பணியாளர்களும் கட்டாயமாக சிங்களம் கற்கவேண்டுமென திணித்தபோது தனது கொள்கைக்கு முன் தனது பதவியை துச்சமென எண்ணி தூக்கியெறிந்தவர்.

பதவிக்காகவும் பணத்துக்காகவும் தமது கொள்கைகளை கைவிடுகின்றவர்கள் மத்தியில் தனது கொள்கைக்காக தொழிலையே துறந்த இனமான செம்மல் ஈழவேந்தன் ஐயா.

தமிழின விடுதலைப்பயணத்தில் அறப்போர் காலத்திலும் மறப்போர் காலத்திலும் ஈழவேந்தன் ஐயாவின் பங்களிப்பு அளப்பரியதாக அமைந்தது. தனது கூர்மையான அறிவாற்றாலாலும் தமிழினத்தின் நீண்ட வரலாற்றியல் அறிவாலும் நாவன்மையினாலும் மக்களின் உள்ளங்களை தொடும் பல எழுச்சியுரைகளையும் பல சொற்பொழிவுகளையும் ஆற்றி விடுதலை பரப்புரை பீரங்கியாக திகழ்ந்தவர்.

அழகு தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் புலமை மிக்க பேச்சாற்றல் உள்ளவராக திகழ்ந்தவர். தனது எழுத்தாற்றலினால் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். ஈழத்தமிழின வரலாற்றில் வட்டுக்கோட்டை பிரகடனம் மிக உன்னதாமான வரலாற்று பிரகடனமாகும்.

அப்பிரகடனத்தின் மூலம் தனிநாட்டுக்கான மக்கள் ஆணையினை பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ் தலைமைகள் பேரினவாதத்தின் தந்திரமிக்க சதிவலையில் சிக்கி தடம்மாறி மக்களாணையினை மறந்து கொள்கையினை கைவிட்டபோது தமிழர் விடுதலை கூட்டணிக்குள் தமிழீழ விடுதலைக் கூட்டணி எனும் அணியினை கோவை மகேசன், கவிஞர் காசியானந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோருடன் இணைந்து உருவாக்கி கொள்கை மாறிய தலைவர்களை கண்டித்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் அதன் கொள்கையினையும் உருவாக்கப்பட்ட நோக்கத்தினையும் சிதறடிப்பதை தடுக்க அரும்பாடுபட்டவர்.

1983 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு இனவன்முறையில் பாதிக்கப்பட்டு இவர் இந்தியாவுக்கு செல்ல வேண்டியேற்பட்டது. அங்கு சென்றும் ஈழ அகதிகளுக்காக குரல் கொடுத்தவர். அவர் தனது கொள்கையில் உறுதியுள்ளவராகவும் விலைபோகாதவாரகவும் இருந்ததன் விளைவாக இந்தியாவின் சதியினால் 2001ல் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

இதனால் பல்வேறு இடர்களையும் அச்சுறுத்தல்களையும் துன்பங்களையும் சவால்களையும் சந்தித்த போதும் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பதனைப்போல் தனது விடுதலைக்கு உரமூட்டும் பணியினை மீண்டும் ஆரம்பித்தவர்.

விடுதலை போராட்டத்தின் தார்மீக நியாயத்தினையும் அதன் உன்னதத்தினையும் தனது பட்டறிவின் மூலமும் அறிவாற்றலினாலும், உரைகள், மக்கள் சந்திப்புக்கள் மற்றும்  எழுத்துக்கள் மூலமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவர். 2004 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 2006 வரை செயற்பட்டவர். 2009 இனவழிப்பின் பின்னர் மூப்பினால் ஏற்பட்ட உடல் இயலாமையிலும்  சர்வதேச அரங்கில்  இன அழிப்பிற்கு நீதி வேண்டி பல்வேறுபட்ட அறவழிப்போராட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.

இவ்வாறாக எமது இன விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழவேந்தன் ஐயா அவர்கள் ஓர் தனிமனித சரித்திரமாக திகழ்ந்தவர். அவர் இவ்வுலகில் இருந்து மறைந்தாலும் ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிலைத்திருப்பார். தாயக கனவுடன் மீளா துயில் கொண்ட ஈழவேந்தன் ஐயா அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தனது இறுதி வணக்கங்களை செலுத்துவதுடன் எமது தேசத்தின் விடுதலைக்காய் தொடர்ந்தும் போராடுவோம் என உறுதி எடுத்து கொள்கின்றோம் -என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *