சம்பளத்தை அதிகரிக்க முடியாது..! நீதிமன்றை நாடும் பெருந்தோட்ட கம்பனிகள்…!

 

அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்காக அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பெருந்தோட்டக் கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *