பொலிஸாருக்கு தண்ணி காட்டி யாழில் இயங்கி வந்த கொல்களம்…! 27 கால்நடைகள் உயிருடன் மீட்பு…! ஒருவர் கைது…!

யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில்  நீண்டகாலமாக இயங்கிவந்த  சட்டவிரோத கொல்களம்  ஒன்று இன்றையதினம்(04)  யாழ்ப்பாண பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
அப்போது,  ஒருவர் மாடுகளை  வெட்டி  இறைச்சியாக்கிக்கொண்டிருந்தமையை  அவதானித்துள்ளனர். உடனடியாக அவரை கைது செய்த பொலிசார், அதில் இருந்த 150 கிலோ இறைச்சியை கைப்பற்றியுள்ளனர். 
அத்துடன் அங்கிருந்த 21 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டதுடன்  4 பெரிய ஆடுகள், இரண்டு குட்டி ஆடுகளும் மீட்கப்பட்டன. இவை திருடப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். 
அத்துடன் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஒரு நாளைக்கு 6 மாடுகள் வெட்டப்படுவதாக தெரியவந்துள்ளது. 
மாடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்காமல், பட்டினியில் இருந்ததால் மீட்கப்பட்ட மாடுகளுக்கு பொலிஸார்  தண்ணீர் வைத்து மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *