சர்வதேச சிலம்பாட்டத்தில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிப்பு…!

இலங்கையில் இவ்வருடம் இடம்பெற்ற சர்வதேச ரீதியிலான சிலம்பாட்ட போட்டியில் பங்குபற்றி சாதனைபடைத்த இனியவாழ்வு இல்ல மாணவர்களுக்கான கௌரவிப்பு  நிகழ்வானது இன்றையதினம்(10)  இடம்பெற்றது.

சர்வதேச ரீதியிலான  இடம்பெறும் மாற்று திறனாளிகளுக்கான சிலம்பாட்ட போட்டி இவ்வருடம் இலங்கையில்  இடம்பெற்றிருந்தது. உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை(04) இடம்பெற்றிருந்தது. 

குறித்த போட்டியில்  புதுக்குடியிருப்பு இனியவாழ்வு இல்லத்தினை சேர்ந்த 26 மாற்றுதிறனாளி மாணவர்கள் பங்குபற்றி 13 தங்கபதக்கம், 8 வெள்ளி பதக்கம் , 4 வெண்கல பதக்கங்களை பெற்று  முல்லைத்தீவு மாவட்டத்திற்கும்,  புதுக்குடியிருப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்திருந்தனர்.

சிலம்பாட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு  புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் அமைந்துள்ள  இனிய வாழ்வு இல்லத்தில்  நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வெற்றியீட்டிய  மாணவர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிலம்ப பயிற்சியினை  வழங்கிய ஜெயம் ஜெகன் ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

இனிய வாழ்வு இல்லத்தின் தலைவரும், மாகாண இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான யேசு ரெஜினோல்டின் தலைமையில் இடம்பெற்ற குறித்த  நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் தமிழ்ச்செல்வன் , இனிய வாழ்வு இல்லத்தின் முகாமையாளர் எஸ். ரவீந்திரன், செயலாளர் கலாநிதி பொன் பேரின்பநாயகம், பொருளாளர் இலங்கை வங்கி ஓய்வுநிலை முகாமையாளர் இ.திருச்செல்வம் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *