மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக சட்ட சமர்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…!

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இம்மாதம் முதல் காணி உரித்தை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அட்டன் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துக்குரிய ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கி வருவதாலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  பக்கம் மக்கள் சக்தி நிற்பதாலும் பேரம் பேசுதல் மூலம் மக்களுக்குரிய அபிவிருத்தி அரசியல் மற்றும் உரிமை அரசியலை வெற்றிகரமாக காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக சம்பள உயர்வு விவகாரத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் இழுத்தடிப்பு போக்கை கடைபிடித்த நிலையில், இது விடயத்தில் அரசு தலையிட்டு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா கிடைப்பதற்கு வழிசமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கம்பனிகளுக்கு எதிராக தற்போது சட்ட சமரை எதிர்கொள்வதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

அத்துடன், மே 26 ஆம் திகதி முதல் சௌமியபூமி திட்டத்தின்கீழ் காணி உரித்து வழங்கப்படும்.

இது மலையக வரலாற்றில் மகத்தானதொரு அரசியல் வெற்றியாகும். எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருப்பதால்தான் அமைச்சரவை ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிகின்றது.

ஆனால் இ.தொ.காவை விமர்சித்தால்தான் சிலருக்கு அரசியல் செய்ய முடியும். காங்கிரஸால் தான் அவர்களும் வாழ்கின்றனர், வாழ்ந்துவிட்டு போகட்டும். தற்போது மக்களுக்கு சேவை செய்வது யார்? வாய்ச்சொல் அரசியல் நடத்துவது யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைவிட, அரச நிறுவனங்களின் பிரதானி பதவி மேலானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். சலுகைகள் கிடைப்பதாகவும் புது விளக்கம் அளித்துள்ளார். சலுகைகளுக்காக எப்போதும் ஏங்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, இப்பதவியை ஏற்றால் நல்லது. ஏனெனில் அதிஉயர் சபையான நாடாளுமன்றம்கூட சிறந்த இடமாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *