வவுனியா சிறைச்சாலையில் உணவகம், சிகையலங்கார நிலையம் என்பன இன்றையதினம்(11) திறந்து வைக்கப்பட்டதுடன், விடுதிக்கான அடிக்கல்லும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் நாட்டி வைக்கப்பட்டது.
வவுனியா சிறைச்சாலையில் நீண்டகாலமாக தண்டனை பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை கொண்டு உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பவற்றினை நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே நடத்தவுள்ளனர்.
அவர்கள் சிறையில் உள்ள காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும், அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு நிலையங்களையும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய திறைந்து வைத்தார்.
அத்துடன், விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டி வைக்கப்பட்டது.
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ்.அபயரட்ண தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி ஏ.டீ.புத்திக்க பெரேரா, பௌத்த மதகுருமார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை நலன் பேணும் அமைப்பினர், சிறைக் கைதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.