காணாமல் போனோர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உரையில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்தில் சென்று தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை தேடித்தருமாறு கோருகின்றனர்.
அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது.
அதனை சர்வதேசத்துக்கு வழங்கினால் உள்நாட்டவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நல்லிணக்க பொறிமுறையானது தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இதனை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது. அது நடைமுறையில் யதார்த்தமானதல்ல. என்றார்.