குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில் அனுஷ்டிப்பு..!

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை  நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது. 

இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த “உப்புக் கடலை உரசிய நினைவுகள்” என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது. 

இந்த நூலை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வெளியிட்டு வைத்தார். 

தொடர்ந்து, குமுதினி படகில் இருந்து கடலில் மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. 

அத்தோடு, உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. 

இந்த நினைவேந்தலில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன், மத தலைவர்கள், படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.  

1985/05/15 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி  குமுதினி படகில் மக்கள் பயணித்தபோது கடற்படையினரால் 07 மாத பெண் குழந்தை, பெண்கள் அடங்கலாக 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *