மட்டக்களப்பு -காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி,
சிறுமியின் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளதாகவும்,
அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி ஒருவர் யாசகம் பெற்றுள்ளார்.
யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில், வெயிலுக்குள் சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி வைத்து ஒருவர் யாசகம் பெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், யாசகம் பெற்ற நபரையும் கைது செய்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சிறுமிக்கு எவ்விதமான உடல்நல குறைபாடுகளும் இல்லை. சிறுமி ஆரோக்கியமாகவுள்ளார் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை,
தான் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும், சிறுமி தனது மகள் எனவும் கூறியுள்ளார்.
நீதிமன்றில் தந்தையை முற்படுத்தியதை அடுத்து, தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறும்,
சிறுமியை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.