உட்கட்சி பதவி மோதல்களால் பிளவுபட்டுள்ள தமிழரசுக் கட்சி…! அமெரிக்கத் தூதுவர் கவலை…!

தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி பதவிசார் பிரச்சினைகளால் வழக்குகளைச் சந்தித்து பிளவுபட்டு நிற்பது கவலை அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை  மேற்கொண்டதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
குறித்த விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சித்தார்த்தன் ஆகியோருடனும் அமெரிக்கத் தூதுவர்  கலந்துரையாடலை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான விடயங்களையும், அபிப்பிராயங்களையும் அமெரிக்கத் தூதர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்து கொண்டார். 
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை விதித்தல், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியோரைக் கைதுசெய்தல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருவதை அமெரிக்கத் தூதருக்கு சுட்டிக்காட்டினார்கள். 
இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதர்,
“இந்தச் சமயத்தில் தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். 
ஆனால், அதற்கு மாறாக கட்சிகள் பிளவுற்று வருகின்றன. குறிப்பாக தமிழ் மக்களின் மிகப்பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி, உட்கட்சி பதவி மோதல்களால் இப்போது வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. 
இதனால் அந்தக் கட்சி மக்களுக்காக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் இப்படி பிளவுற்றிருப்பதுவேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *