ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு…!

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கூறிய கருத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மறுதளித்திருந்தார்.

இது  தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய உருத்திரகுமாரன்,

இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பது சர்வதேச மட்டத்தில் கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட்ட விடயம் என்றும், அதற்குப் பொதுத் தமிழ் வேட்பாளர் விடயம் குந்தகம் விளைவிக்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான நடவடிக்கையில் தான் பங்குபற்றியதால், அந்தக்கூற்றை சரி செய்ய வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் ஒரு கூட்டாட்சி தீர்வை ஏற்படுத்துவதற்கு புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை, மாறாக “தமிழ் பேசும் மக்களின் வரலாற்று தாயகப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு  கட்சிகள் ஒப்புக்கொண்டன.

பாலா அண்ணா தனது “போரும் அமைதியும்” என்ற புத்தகத்தில் “சமஷ்டி தீர்வை ஆராய்தல்” [பக்கம் 403] என்ற தலைப்பின் கீழ், ஒஸ்லோ செய்திக்குறிப்பு பற்றி பேசும்போது, “…. “ஒஸ்லோ பிரகடனம்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட பிரகடனம் இல்லை என்று கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமாதான முயற்சியில் ஈடுபட்ட தரப்பினர் சமஷ்டி தீர்வை ஆராய்வதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டவர்கள் என்ற உண்மையை வலியுறுத்த, பாலா அண்ணா “ஆராய்வு” [பக்கம் 404] என்ற வார்த்தையை சாய்வாக (Italic) எழுதினார்.

 விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழீழத்தை கோருவதை ஒருபோதும் கைவிடவில்லை என்றும், உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை ஆராய்வதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும் வலியுறுத்தினார்.

 ஒஸ்லோ அறிக்கையின் பின்னர் பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன குறிப்பாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை. ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதிக்கட்டத்தின் போது 70,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். 

எனவே, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும், இன்னுமொரு இனப்படுகொலை நடவாமல் இருப்பதற்காக, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே ஒழிய ஒஸ்லோ அறிக்கையின் அடிப்படையில் அல்ல எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *