அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.