யாழில் மதுபானசாலைக்கு எதிராக வீதியில் இறங்கிய சிவில் சமூக அமைப்புக்கள்…!

மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி யாழில் இன்றையதினம்(28) கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பிரபல பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றிற்கு அண்மையாக மதுபானசாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் பிறழ்வான நடவடிக்கைகள் குறித்த பகுதியில் இடம்பெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படும் நிலையில் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்ககூடாது என தெரிவித்து இன்றையதினம்(28) கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊர்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக குறித்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மதுபான சாலைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட  பதாகைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தின்போது மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி  மக்களிடம் கையொப்பமும் பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகளை தாங்கியவாறு உள்நுழைந்து ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய   மகஜரையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *