இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை குறித்து கனேடிய நாடாளுமன்றம், சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லவேண்டும் என கோரும் மனு தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை, கனடாவிலுள்ள மார்க்கம் வீதி 27 என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னணி சமூக மையத்தில் குறித்த சந்திப்பானது இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சேனின் ஒத்துழைப்புடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டமைப்பினால் இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, “இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2006 முதல் 2009 வரையிலான ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் உள்ளிட்ட கொடூரமான குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்யுங்கள்.
பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த அட்டூழியக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளின் அவசியத்தை வலியுறுத்துங்கள்” என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.