முல்லைத்தீவில் தனியார் நிறுவனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதி…! பிரதேச சபை விளக்கம்…!

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தினால் கடற்கரைக்கு செல்லும் வீதியானது வேலியிடப்பட்டமை தொடர்பாக பிரதேச சபையிடம் விளக்கம் கோரப்பட்டு கடிதம் ஒன்று கிராம  அமைப்புகளால் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதற்குரிய பதிலை பிரதேச சபை வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த வீதியானது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொது வீதி என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறித்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக குறித்த வேலியினை அமைத்துள்ளமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நேற்றையதினம்(30) விளக்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும் கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது.

குறித்த  வீதியூடாக மீன்பிடிக்குச் செல்ல முற்பட்ட மீனவர்கள் வீதி வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதனை அடுத்து அதிர்ச்சி அடைந்தனர். பின் ஊர் மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள் வேலிகளை அகற்றினர்.

குறித்த பகுதியில் சுற்றுலாத் தளம் ஒன்றினை அமைத்துள்ள நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது  மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தியோநகர் மக்கள் நேற்றையதினம்(30)  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரை அழைத்து கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கடித்ததை காண்பித்து அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *