சட்டபூர்வ தமிழீழத்திற்கான அங்கீகாரம் சிறிலங்காத் தீவில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டு…!

சட்டபூர்வ தமிழீழத்திற்கான அங்கீகாரம் சிறிலங்காத் தீவில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும்  என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன்  உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று(31) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள், இஸ்ரேலிய பிரதமர் உட்பட ஆகியோரை கைது செய்யக்கோரும் துணிச்சலான சட்ட நடவடிக்கைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) வழக்குத்தொடுநர் கரீம் கானை (Karim Khan). நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது. வழக்குத்தொடுநர் கரீம் கான் கூறியது போல், “சர்வதேச சட்டம் மற்றும் ஆயுதப்போராட்ட சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை நாங்கள் மீண்டும் கோடிட்டுக் காட்டுகிறோம்.

எந்த ஒரு இராணுவமோ, எந்த ஒரு தளபதியோ, எந்த ஒரு அரச தலைவரோ, குற்றங்களுக்கு தண்டனையின்றி செயல்பட முடியாது.” அமெரிக்கவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தியோடர் மெரோன் (Theodor Meron) மற்றும் அமல் குளூனி(Amal Clooney) உட்பட கலாச்சார, மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட 17 சிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய சர்வதேச சட்ட வல்லுநர்கள் குழு, தங்கள் அறிக்கையில் “எந்த ஒரு போரும் சட்டத்தின் கைகளில் இருந்து தப்பமுடியாது என்று கூறியுள்ளார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக அட்டூழிய சர்வதேசக் குற்றங்களை புரிந்த சிறிய வங்குரோத்து சிறிலங்கா 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சட்டங்களை புறக்கணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. உள் ஆய்வு அறிக்கையின்படி, ஆயுதபோரின் இறுதிக் கட்டத்தின்போது, “70,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதற்கான நம்பத்தகுந்த தகவல்” உள்ளது என கூறியுள்ளது. மறைந்த மன்னார் ஆயர் டாக்டர் ராயப்பு ஜோசப்பின் கூற்றுப்படி, 1,46,679 பேர்கள் “பற்றிய தகவல் இல்லை (unaccounted) “இவ்வாறான தகவல்கள் இருந்தபோதிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் நிபுணர் குழுவினர் கூறிய, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்ற கூற்றுக்கு முரணாக சிறிலங்காவில் இன்றுவரை “எந்த ஒரு இராணுவமோ, எந்த ஒரு தளபதியோ, எந்த ஒரு அரசியல் தலைவரோ” கைது செய்யப்படவும் இல்லை,அட்டூழியக் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்படவும் இல்லை.

மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஸ்தானிகர் Michelle Bachelet தனது 2021 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்தும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை முடிவுகளைத் தரத் தவறிவிட்டன, மேலும் புரையோடிப்போயிருக்கும் தண்டனையின்மை பாதிக்கப்பட்டவர்களின் அவநம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. எனவே சர்வதேசப் பொறிமுறைகள் மூலமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க முடியும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனிநபர்கள் மீது வழக்குத் தொடுப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டிய சிங்கள சமூகத்திற்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதையும் நாம் உணர்ந்து கொள்கின்றோம். இன்றுவரை “சமாதானப் புறா” என வர்ணிக்கப்படும் தற்போதைய இலங்கை ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்க உட்பட எந்த சிங்கள அல்லது சிங்கள அரசியல் தலைவர்களோ, எந்த முக்கிய சிங்கள கட்சிகளோ, சிங்கள பௌத்த அமைப்புகளோ,சிங்கள ஊடகங்களோ தங்களது குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை. தமிழர்களிடம் மன்னிப்பும் கோரவில்லை.

ரோம் சட்ட உடன்படிக்கையில் சிறிலங்கா ஒரு பங்காளியாக இல்லாததால் (not a party to the Rome Statute) அந்த அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை பிரயோகிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் திரு. ஸெய்ட் ராத் அல் ஹுசைன்,( Mr. Zeid Ra’ad Al Hussein) 2015 ஆம் ஆண்டு தனது அறிக்கையில், ரோம் சாசனத்தில் சிறிலங்கா ஒரு பங்காளியாக வர வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், அந்த அழைப்பு செவிடன் காதில் விழுந்தது.

பூகோள அரசியல் நலன்கள் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இன்றுவரை சிறிலங்காவின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்யவில்லை. இந்தச் சூழலில், 2024 மே 20 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்களை கைது செய்யக்கோரும் பிராந்து தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடைப்பிடித்த அதே நடைமுறையைப் பயன்படுத்துமாறு ஈழத் தமிழர்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பாலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்கும் திறன் கொண்ட நாடு அல்ல என்று இஸ்ரேல் வாதிட்டபோதும், 2015 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பாலஸ்தீனம் சர்வதேச நியாயாதிக்கத்தை அங்கீகரிப்பதாக கூறியதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

செப்டம்பர் 15, 2022 அன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீண்ட இறைமை என்ற சர்வதேச சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் 1972 மற்றும் 1978 சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டங்களை ஈழத்தமிழர்கள் ஏற்க மறுத்ததன் விளைவாக, காலனித்துவ நாடுகளால் பறிக்கப்ப்ட்ட இறைமை ஈழத்தமிழர்களிடம் மீளத் திரும்பி உள்ளது என்றும் அதன் அடிப்படையில் சட்டபூர்வ தமிழீழத்தின் சார்பாக சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சர்வதே குற்றவியல் பதிவாளருக்கு அறிவித்தது. நியாயாதிக்கத்தை எற்கும் கடிதத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பின்வருமாறு கூறியது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் பிரிவு 12, பத்தி 3க்கு   இணங்க, சட்டபூர்வ தமிழீழ அரசு, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் நியாயாதிக்கத்தின் உள்ளடங்கும் போர்க்குற்றங்கள். மானிடத்திற்கு  எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களை தமிழீழ நிலப்பரப்பில் புதிந்தவர்களையும் அதற்கு  உடந்தையாக இருந்தவர்களையும் அடையாளம் காண்பதற்கும் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கும், நீதி வழங்குவதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை அமுலுக்கு வந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து காலவரை இன்றி சட்டபூர்வ தமிழீழம் ஏற்றுக்கொள்கிறது.

பாலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பின்னணியில் வாதிட்டபடி, ரோம் சட்டத்தின் 12(3) வது பிரிவில் கூறப்பட்டுள்ள “நாடு”என்ற பதம் உட்பட ரோம் சட்டத்தின் பின்னணியிலும், அதன் நோக்கத்தின் அடிப்படையிலும் பொருள் கொடுக்கப்பட வேண்டும்.

சட்டபூர்வ தமிழீழம் ரோம் சட்ட நடவடிக்கையில் இணைந்ததை ஏற்கவும், தமிழ் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை நடத்திய குற்றவாளிகளை விசாரித்து நீதி வழங்கவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *