கடும் பனி மூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை

 

நுவரெலியா பிரதான பாதைகளில் அதிக பனி மூட்டம் நிலவுவதால்  வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்தும்படி நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி, 

அதேபோன்று நுவரெலியா – கண்டி வீதியில் பம்பரக்கலை, டொப்பாஸ், குடாஓயா, லபுக்கலை, கொண்டக்கலை பாதை,

நுவரெலியா – உடபுசல்லாவ வீதியில் ஆவேலியா, பொரலந்த, கந்தப்பளை,  இராகலை பாதை, 

நுவரெலியா – பதுளை – வீதியில் தர்மபால சந்தி, மாகாஸ்தோட்ட, கட்டுமான, சீத்தாஎலிய, ஹக்கலை மற்றும் பொரகாஸ் உட்பட அம்பேவல, மீப்பிலிமான, பட்டிபொல மற்றும் உலக முடிவு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. 

இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது. 

தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகிறது.

குறிப்பாக  சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு வாகனங்களில் வருகை தருகின்றனர்.

எனவே, எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என நுவரெலியா  போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *