
போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று கூறி ஒளிவதைவிடவும், போர்க்குற்ற விசாரணைக்கு அரசு அச்சமின்றி முகங் கொடுக்கவேண்டும். எவரேனும் போர்க்குற்றங்களை இழைத்திருந்தால் உள்ளகப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு இறுதிப் போரை வழிநடத்திய இலங்கை இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து படையினரை மீட்டெடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அச்சமின்றி முகம் கொடுக்க வேண்டும்.
எதுவும் செய்யவில்லை என ஒளிவதில் பயனேதும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் தவறிழைத்திருந்தால் தேசிய பொறிமுறையில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதை நாம் செய்யாமையால் சட்டபூர்வமான போரை முடித்தவர்கள் கூட போலிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காக வேண்டியுள்ளது. இது கவலைக்குரிய விடயம்.
மனித உரிமை ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. ஆயிரக்கணக்கில் சாட்சியங்களை திரட்டியுள்ளாராம்.
படையினருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களில் 99 வீதமானவர்கள் புலி ஆதரவாளர்கள் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். இனப்படுகொலை நடந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்த மக்களைத் தியாகங்களுக்கு மத்தியில் படையினர் மீட்டனர்.
சர்வதேசச் சட்ட திட்டங்களுக்கு அமையவே நாம் போரிட்டோம். பின்களத்தில் இருந்த ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம். எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கின்றது. அது தொடர்பாகத் தேடிப் பார்க்கலாம். அப்போதுதான் படையினரின் நன்மதிப்பைக் காத்துக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவித்தார்.