ஐ.தே.க.வுடன் இணைவது என்கிற பேச்சுக்கே இடமில்லை; சிங்கப்பூரில் கலந்துரையாடல் என்பது முழுப்பொய்! – மத்தும பண்டார

 

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இணைவு குறித்த பேச்சுக்கள் சிங்கப்பூரில் இடம்பெறவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை நிரகாரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார அவ்விதமான கருத்துக்கள் முழுப்பொய் என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் எங்குமே நடைபெறவில்லை.

எதிர்காலத்திலும் அவ்விதமான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படப்போவதில்லை என்றும் கூறினார். 

ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாளுக்கு நாள் முக்கிய அரசியல் தரப்பினர் இணைந்து வருகின்றனர். 

ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் செல்வாக்கின் அடிப்படையிலும் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதன் காரணத்தினாலும் எம்முடன் பலர் கைகோர்க்கின்றார்கள்.

எமது தரப்புக்கு பெருகிவரும் செல்வாக்கையும் ஆதரவினையும் கண்டு அச்சமடைந்துள்ள தரப்பினர் பொய்யான புனைகதைகளை இப்போது வெளியிட்டு வருகின்றார்கள். அதிலொன்றுதான் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியிடத்தில் பல்வேறு தரப்பினரும் இணைந்து செயற்படுவது குறித்த யோசனைகளை முன்வைக்கின்றார்கள். 

ஆனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகி நிற்கும்  ஊழல், மோடிக் குற்றங்களுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளுக்கு செல்வதற்கு விரும்பவில்லை.

எம்மைப் பொறுத்தவரையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் பேச்சுவார்த்தைக்கு செல்லவும் இல்லை. 

எதிர்காலத்தில் பேசப்போவதும் இல்லை. மக்கள் தீர்க்கமான முடிவுகளை வழங்குவதற்கு தயாராகிவிட்டார்கள். கள நிலைமைகள் அதனை தெளிவாக உணர்த்துகின்றன. 

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு உரிய காலத்தில் செல்ல வேண்டும். அதுவே எமது பகிரங்கக் கோரிக்கையாகும். நாம் எந்தத் தேர்தலுக்கும் தயாராகவே உள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *