கச்சத்தீவு விவகாரம் – மோடியிடம் காங்கிரஸ் கேள்வி!

இந்திய மக்களவைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பிய பிரதமர் மோடியை இந்திய காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

இந்த விடயம் இலங்கையுடனான இந்தியாவின் உறவை சீர்குலைத்துவிடும் எனவும், இவ்வாறு பாரிய அச்சத்தை உருவாக்கியமைக்காக பிரதமர் மோடி மற்றும் அவரது தரப்பினர் மன்னிப்பு கேட்கத் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

அத்துடன், பாரதிய ஜனதா கட்சி மிகவும் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டு வரலாற்றை சிதைத்துள்ளது எனவும் ஜெயராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னதாக, கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸின் முன்னாள் பிரதமர்கள் அலட்சியம் காட்டுவதாகவும், சட்டப்பூர்வ கருத்துகள் இருந்தபோதிலும் இந்திய மீனவர்களின் உரிமைகளை பறிகொடுத்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவை திரட்டுவதற்காக அவரது சகாக்கள் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்ததாக ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையுடனான இந்தியாவின் உறவை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், அதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி வழங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *