13 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த ஜே.வி.பி நடவடிக்கை…! சஜித் தரப்பு எம்.பி வரவேற்பு…!

35 வருடங்களின் பின்னர் தற்பொழுது 13 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவற்கு ஜே.வி. பியினர்  முன்வந்திருப்பதை வரவேற்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

யாழில் இன்றையதினம்(11)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ண இவ்வாறு தெரிவித்தார்.

யாழ் நகரின் தீவு பகுதியின் போக்குவரத்து, மக்களின் கல்வி நிலை, அடிப்படை வசதிகளில் ஒன்றான தண்ணீர் பிரச்சினை இன்றும் இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

யுத்தம் நடந்த பிரதேசம் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் இங்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை நாம் நடைமுறைபடுத்துவோம். நாட்டிலுள்ள சட்டத்தினை நடைமுறைபடுத்துவது இவ்வளவு பிரச்சினையாக இருந்தால் அதனை நிச்சயமாக நாம் நடைமுறைபடுத்துவோம்.

எமது தலைவர் சஜித் பிரேமதாச அதனை நிச்சயம் முன்னெடுப்பார். இதன் முதற்கட்டமாக மாகாண சபையின் தேர்தல் நடாத்தப்படும் .

இப்பொழுது ஏகாதிபத்திய அரசு இருக்கிறது. ஜனாதிபதியின் கையில் அதிகாரம் உள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் காணி,பொலிஸ் அதிகாரம் என நடைமுறைபடுத்தவுள்ளோம். 

இந்நிலையில் இன்று அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் 13 ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைபடுத்துவதாக கூறியுள்ளார்கள். இதனை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு சுமார் 35 வருடங்கள் எடுத்துள்ளது.

கடந்த தேர்தலில் சஜித்திற்கு தமிழ் மக்கள்  வாக்களித்தார்கள். ஆனால் சிங்கள மக்களின் வாக்கோடு கோட்டாபய ஆட்சிக்கு வந்தார். இது ஒரு ஜனநாயக நாடு யாரும் இங்கே போட்டியிடமுடியும்.

எந்த இடத்திலும் இனவாத குழு இருக்கிறது. அந்த தருணங்களில் எமது தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு ஆதரவாக அன்றி அனைத்து இனங்களுடனும் மதங்களுடனும் இணைந்தே செயற்படுவார் .

35 வருடங்களின் பின்னர் தற்பொழுது 13 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவற்கு ஜே.வி.பி முன்வந்தது போல பல இனவாத குழுக்களினை சேர்ந்தோரும் எதிர்காலத்தில் முன்வருவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *