போர் முடிந்து 15 வருடங்களாகியும் வடக்கில் அபிவிருத்தி இல்லையே – சஜித் கவலை!

“யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 233 ஆவது கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், மானிப்பாய் புனித. ஹென்றியரசர் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

“வடக்கு மாகாணத்தில் மக்களை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றது. இது மக்களை முன்னிலைப்படுத்திய பங்கேற்பு அபிவிருத்தியின் ஒரு வடிவமாக அமைந்து காணப்படும். இதன் மூலம் கிராமத்தைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்குப் பக்க பலம் கிடைக்கும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

“இதற்கு, அறிவு சார்ந்த பொருளாதாரம், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடு நாட்டில் இன்று எழுந்துள்ளது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

“யாழ். மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் பூங்காக்களை அமைத்து, அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக முன்னெடுப்போம். இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *