
வருடாந்தம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் இன்று தொடங்கி 12 வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த ஆண்டில் ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வாகை சூடிய நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏனெனில் இங்கு அவர் பட்டம் வென்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார்.
அத்துடன், 1969ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வீரரும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை. அந்த அரிய சாதனையை படைக்கும் வாய்ப்பும் ஜோகோவிச்சுக்கு உருவாகியுள்ளது.
முதல் சுற்றில் அவர் தகுதி நிலை வீரர் டென்மார்க்கின் ஹோல்ஜர் நோட்ஸ்கோ ருனேவை எதிர்கொள்கிறார்.
ஒலிம்பிக் சாம்பியனும், சமீபத்தில் சின்சினாட்டி ஓபனை வென்றவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 2-ம் நிலை வீரர் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் ஜோகோவிச்சுக்கு கடும் சோதனையாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி (ஆஸ்திரேலியா), நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), அரினா சபலென்கா ( பெலாரஸ்), ஸ்வியாடெக் (போலந்து), ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), சிமோனா ஹாலெப் (ருமேனியா) , பிளிஸ்கோவா (செக் குடியரசு) உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.422 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.18½ கோடியும், 2-வது இடம் பிடிப்போருக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ரூ.4¾ கோடி கிடைக்கும்.
முதல் நாள் ஆட்டங்கள் இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




