வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் – மாகாண ஆளுநர் பெருமிதம்!

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என மாகாண  ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் கிரிமெட்டியான பௌத்த பாலிகா தேசிய பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நசீர் அஹ்மட் மேலும் கூறியதாவது, 

வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நாங்கள் பெருமளவில் நீக்கியுள்ளோம்.  சுமார் நான்காயிரத்து இருநூறு பேரளவிலான  ஆசிரியர் நியமனங்களை நாங்கள் கட்டம் கட்டமாக வழங்க உள்ளோம்.  

அத்துடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களை மாவட்டத்திற்கு உள்ளேயே நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வடமேல் மாகாணத்தின் கல்வி மற்றும் ஏனைய துறைகளில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அதற்காக வடமேல் மாகாண மக்களின் சார்பில் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், துணிச்சலுடன் நாட்டைப் பொறுப்பெடுத்து பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மட்டும்தான். 

அந்த வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எமது ஜனாதிபதி பாராட்டப்படுகின்றார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோரும் உரை நிகழ்த்தியதுடன், புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிந்தக மாயாதுன்ன உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *