சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவம்- மூதூர் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று ஆராய்வு!

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று சனிக்கிழமை விஜயம் செய்து  பார்வையிட்டார்.

மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல் மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11.06 2024 அன்று சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் தாக்கல் செய்தார்கள். சம்பவ இடத்திற்கு 15.06.2024 இன்று விஜயம் மேற்கொண்டு ஆராய்வதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். 

அந்தவகையில் இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுச் சென்றார்.

குறித்த மலை உடைப்பின் காரணமாக அருகில் உள்ள விவசாயம்,போக்குவரத்து,கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பாதிப்பிருப்பதாகவும் கிராமத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

இங்கு வருகை தந்த சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்

சேனையூர் நெல்லிக்குள மலையைச் சுற்றி காணிகள் இருக்கின்றன.இங்கு கல் உடைப்பதற்கு எந்த வகையில் அனுமதி வழங்கப்பட்டது என்று எமக்கு தெரியாது. நீதிமன்றத்தில் இந்த விடயம் இருப்பதால் எமக்கு கருத்து சொல்ல முடியாதுள்ளது.

இதனால் இக்கிராம மக்கள் கஷ்டப்படுகிறார்கள் துன்பப்படுகிறார்கள் என்று மாத்திரம் எமக்கு தெரிகின்றது என்றார். தற்போது இந்த இடத்தினை நீதிபதி அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றதினால் 20 ஆம் திகதி எமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *