சங்குப்பிட்டி பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி- சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி நகர்கின்றதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம்  கடந்த 16.01.2011 ஆம் திகதியன்று அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

அதாவது, பாரிய நிதி செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலம், தற்பொழுது சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிரீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலம் துருப்பிடித்து சிதைவுகள் ஏற்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பாலத்தை தாங்கும் ஆணிகள், நட்டுகள் மற்றும் பாலத்தின் முக்கிய பகுதிகள், துருப்பிடித்து சிதைவடைகின்றமையையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாலத்தின் வடக்கு பக்கமாக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பகுதிகள் சிலவும் காணாமல் போயுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் வருடம் தோறும் குறித்த பாலத்தை பராமரித்து வந்ததாகவும் தற்பொழுது குறித்த பாலம் பராமரிக்கப்படுவதில்லை எனவும் மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தினைக் கொண்டு பாரிய நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த பாலத்தை உரிய முறையில் பாதுகாக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தி உடன் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் பாலத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *