
3 வாரத்தில் கொவிட் மரணங்களை பூச்சியமாக்குவோம்!கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் சுகுணன்சூளுரை.

( வி.ரி.சகாதேவராஜா)
எமது கல்முனை பிராந்தியத்தில் முதலாவது தடுப்பூசி ஏற்றிய வீதம் 93 சதவிகிதத்தை தாண்டியுள்ளது . இரண்டாவது தடுப்பூசி இன்று திங்கட்கிழமை(30) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கிறது.எண்ணி இன்னும் மூன்று கிழமைகளில் நாம் கல்முனை பிராந்தியத்தில் கொவிட் மரணங்களை பூச்சியத்திற்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் சுகுணன் சூளுரைத்தார்.
கல்முனைப்பிராந்தியத்தில் சமகால கொவிட் நிலைமை பற்றிமேலும் கூறுகையில்:
தடுப்பூசி வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் எமது பிராந்தியத்தில் தொற்றின் வேகமும் ,மரணவீதமும் அதிகரித்துவருகிறது.எமக்கு இறுதியாக்கிடைத்த தடுப்பூசிகளைக்கொண்டு முதலாவது டோஸ் இதுவரை 93வீதமானோர்களுக்கு ஏற்றியுள்ளோம்.
இது சாதனையாக கருதப்பட்டது. எனினும் 60வயதுக்கு மேற்பட்ட சிலர் தடுப்பூசிகளைப் பெறாதகாரணத்தினால் மரணவீதம் அதிகரித்துவருகிறது.
முதலாவது டோஸ் நிறைவுசெய்ய 50 ஆயிரம் ஊசிகளும் இரண்டாவது டோஸ் ஆரம்பிக்க 2 லட்சத்து 40 ஆயிரம் ஊசிகள் தேவைப்பட்டன. கடந்தவாரம் கிடைத்த 20 ஆயிரம் தடுப்பூசிகளைக்கொண்டு கணிசமான கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் 60வயது கடந்தோருக்கும் ஏற்றியுள்ளோம்.
முதலாவது டோஸ் ஏற்றி 3வாரங்கள் கடந்துள்ளன. எனவே இரண்டாவது டோஸ் இன்னும் ஒருவார காலத்தில் ஏற்றப்படவேண்டும்.
அந்த இரண்டாவது தடுப்பூசி இன்று திங்கட்கிழமை(30) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கிறது.
அதற்கேற்ப பொதுமக்கள் தமக்குரிய நாட்களில் உங்களது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
அதனிடையே பொதுமக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தமும் மறைமுகமாக ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நிலைமையையுணர்ந்து இரண்டாவது டோஸ் ஏற்றும்வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.




