மீனவர் பிரச்சினையை கணக்கிலெடுக்காத தமிழ் எம்.பிக்கள்…! தம்பிராசா ஆதங்கம்…!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார  அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா  தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில்  இன்று(22)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வாரம் இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். 

ஆனால் ஜெய்சங்கர் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ் கட்சிகள் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய விவகாரம் தொடர்பில் பேசாது பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமை மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 

எமது வடபகுதி மக்களின் பிரதானமான வாழ்வாதாரத் தொழிலாக விளங்குகின்ற கடற்தொழிலை எமது தொப்புள் கொடி உறவு என்று கூறும் இந்திய மீனவர்களால் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம் எமது தமிழ் அரசியல்வாதிகள் இந்தியா எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் இந்திய தரப்புகளுடன் பேசுவதில் மௌனம் காப்பது எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

இந்திய தரப்புடன் பேசும்போது தமிழ் பிரதிநிதிகள் 13 வது திருத்தத்தை பேசுவதை  தவிர்த்து இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் தொடர்பில் பேச வேண்டும். 

ஏனெனில் இந்தியா நினைத்தால் ஒரு மணித்தியாலத்திற்குள் இலங்கை அரசாங்கத்தை பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய முடியும். 

ஆகவே, தமிழ் அரசியல்வாதிகளிடம் வினியமாக ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். முடிவில்லா தொடரும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் ஓரணியாக இந்திய தரப்புகளுடன் பேசி சரியான முடிவை  எட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *