வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நாளை முன்னிட்டு, சர்வதேச சமூகத்தினரிடம் நீதி கோரி தமிழர் பகுதிகளிலும், வீடுகளில் இருந்தவாறும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக இன்று தினேஷ் குணவர்த்தனவினால் சொல்லப்படுகின்ற கருத்தானது மிகவும் பொய்யானது என தெரிவித்தார்.
மேலும், எங்கள் உறவுகள் வெளிநாடுகளில் பெயர் மாற்றம் செய்து இருப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு எமது உறவுகள் இருந்து இருந்தால் நாங்கள் ஏன் போரட்டப் போகின்றோம்? வெளிநாடுகளுக்கு எமது உறவுகளை அனுப்பிவிட்டு இங்கு போராட வேண்டிய அவசியம் இல்லை .
அத்துடன், எமது உறவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி எம் உறவுகளுக்கான நீதியை வெகுவிரைவில் பெற்றுத் தருமாறு கோரியுமே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
எனவே, நாம் நீதியில்லாமல் இறக்கக் கூடாது. சாட்சியங்களாக இருக்கின்ற எமது உறவுகள் இன்று இறந்து கொண்டு இருகின்றார்கள். இதற்கான தீர்வை விரைவில் பெற்றுத் தருமாறு மேலும் கேட்டுக் கொண்டனர்.





