யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான லெஸ்லி கிரேக் (Lesley Craig) மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பானது நேற்று (25) இரவு யாழ் நகரிலுள்ள ஜெற்விங் Jetwing விடுதியில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரால் பின்வரும் விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுகாஷ் கனகரத்தினம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 75 வருடங்களாக இலங்கை அரசு கடைபிடித்துவரும் கொள்கைகளும், தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையுமே இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிரதான காரணங்களாகும்.
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. இலங்கையில் இனப்பிரசினைக்கான அடிப்படை காரணியாக அமைந்தது இலங்கையிலிருக்கும் ‘ஒற்றையாட்சி’ அரசியல் அமைப்பாகும்.
ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் 13 ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு முற்றுமுழுதாக நடைமுறையில் இருக்கும்போதே தமிழ்த் தேசம் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடைபெற்றிருந்தது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனவழிப்புக்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை போன்றவற்றிற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தமிழர் தேசம் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பும் தீவிரமடைந்து மீண்டும் இனமுரண்பாடுகள் வலுவடைந்து செல்வதற்கும் அடிப்படைக் காரணம் இதே ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பேயாகும்.
13 ம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து சிறீலங்காவின் மீயுயர் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும் , கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, அதிகார பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன.
உச்ச நீதிமன்று 13ம் திருத்த அதிகாரங்கள் குறித்து இதுவரைகாலமும் வழங்கிய தீர்ப்புக்களின் அடிப்படையிலும், 13 ம் திருத்தமானது, சிறிலங்காவின் சட்டவரம்புகளின் பிரகாரம் அது ‘முழுமையாக’ அமுல்படுத்தப்பட்டே உள்ளது.
இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான வரைபைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2016இல் ஆரம்பித்து – 2019 சனவரியில் நிறைவடைந்தது. ஆந்த வரைபானது தற்போதுள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பினை விடவும் மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்கான வரைபாகும். அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையில், அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரியமுறையில் பிரயோகிக்கவோ முடியாது. இந்த காரணிகளின் அடிப்படையிலே எமது அமைப்பானது, 13 ஆம் திருத்தினைத் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவேனும் கருத்திலெடுக்க கூடாதெனும் நிலைப்பாட்டினை ஆரம்பம் முதல் உறுதியாகவுள்ளது.
ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் நிராகரிப்பதுடன், தமிழர்தேசத்தை அங்கீகரித்து அதை பாதுகாக்கின்ற வகையிலானதும், தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத தங்களது சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்க கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் எனவும் எமது அமைப்பு பிரித்தானியாவை கோரிநிற்கின்றது.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் கடந்த 12 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் விவகாரத்தினை அங்கிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் ஒருவரை இலங்கையின் பெயர்குறித்து வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பான அறிக்கையிடலுக்காக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த 14 ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அமர்வுகளில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான இடையீட்டு விவாதங்களின்போதான எந்தவொரு சந்தற்பத்திலும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பு யார் என்பதுபற்றி இதுவரை வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் ஆனால் கடந்த 2024 மார்ச் 1 திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் மியன்மார் நாடு குறித்து பிரித்தானியா சமர்ப்பித்த அறிக்கையில் 6 தடவைகள் றோகின்யா இன்த்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே எதிர்காலத்தில் ஐ.ந மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழ்கள் என்பதனைத் தெளிவாக குறிப்பிட பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் போரினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை அரசினால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தினை போரால் பாதிக்கப்படட பிராந்தியமாகப் பிரகடனம் செய்யவும் இப்பிரதேச அபிவிருத்திக்கென சர்தேச நிதிஉதவியைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்
தமிழர் தாயகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சிங்களமயமாக்கல்களையும் பௌத்த மயமாக்கல்களையும் தடுத்து நிறுத்த உடனடி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும்.
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் கைது செய்யப்படுவதும் சிறையிலடைக்கப்படுவதும் பொய்வழக்குகள் தொடர்வதும் இன்னமும் தொடர்கின்றது. இக்கொடிய சட்டத்தை நீக்க பிரித்தானிய அரசு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 15 – 29 வருடங்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலிலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது
மாறி மாறி ஆட்சிப்பீடமேறும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் கட்டமைப்பு சார் இனவழிப்பையும் தீவிரப்படுத்திவரும் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணப்பதென எமது அரசியல் இயக்கம் தீர்மானித்துள்ளது என்பதனையும் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படும் நிலையிலேயே முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்பதனையும் தெளிவுபடுத்தப்பட்டது
என்பன உட்பட பல விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.