
நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தை விரிபுபடுத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் வெளிநாடு செல்லவிருப்பவர்களுக்கும் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்படுவது இல்லை என்றும் அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியே அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இருப்பினும் சில வைத்தியசாலைகளில் பிரத்யேகமாக தடுப்பூசி வழங்குவதற்குரிய வசதிகள் இல்லை என்பதனால் அவர்கள் மீண்டும் தற்காலிக நிலையங்களுக்கு திரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஆகவே அனைத்து வைத்தியசாலைகளிலும் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டும் என உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு தேவையான ஆவணங்களை இதுவரை பெறாதவர்களாலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்தார்.
ஆகவே தற்போதைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பாக மீளாய்வு செய்து குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.




