இந்தியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் புதிதாக இரண்டு வீரர்கள் சேர்ப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 15பேர் கொண்ட அணியில், சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டின் இங்கிலாந்தின் சிறந்த வீரரான வோக்ஸ், 12 மாதங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை,

ஏனெனில் கிரிக்கெட் சபையின் ஓய்வு மற்றும் சுழற்சி கொள்கை, குதிகால் காயம் ஆகியவற்றினால் இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் விலகினார். இருப்பினும், அவர் இப்போது உடற்தகுதிக்கு திரும்பியுள்ளார்,

இதேவேளை, விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், தனது சொந்த காரணங்களுக்காக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக இந்த அணியில், சேம் பிளிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

ஜோ ரூட் தலைமையிலான அணியில், மொயின் அலி, ஜேம்ஸ் எண்டர்சன், ஜோன்னி பெர்ஸ்டோ, சேம் பிள்ளிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சேம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லொரன்ஸ், டேவிட் மலான், கிரெக் ஒவர்டன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *