கிராம உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை இந்த வருடம் அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் பாதிக்கப்படலாம் என அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கம் எச்சரித்துள்ளது.
அநுராதபுரத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய அமைப்பாளர் சுஜீவ லியனகே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட சேவை அரசியலமைப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்கவும் மற்றும் கிராம சேவையாளர் தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சேவை சட்டத்தை அங்கீகரிப்பதற்காகவும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கடந்த 26 ஆம் திகதி முதல் நேற்று (28) இரவு 8 மணி வரை பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிராமிய சேவை துறையில் கடமையாற்றும் வகையில் வழங்கப்படும் மாதாந்தம் 600 ரூபா கொடுப்பனவு போதாது எனவும் சுஜீவ தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அங்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு முழுவதும் உள்ள 14022 கிராம சேவைப் பகுதிகளில் உள்ள 12500 கிராம உத்தியோகத்தர்களும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.