நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் நாளைய தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, பதாகைகளை காட்சிப்படுத்தி இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சுறுத்தல்களை விடுப்பதாக தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
நாளை மறுதினம் பாடசாலை முடிவடைந்ததன் பின்னர், பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 26ம் திகதி கொழும்பில் போராட்டம் நடாத்தப்பட்டதுடன், அன்றைய தினம் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடாத்தப்பட்டது.
தம்மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 27ம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தனர்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.