கண்டி – பன்வில பகுதியில் 5 பாடசாலை மாணவிகளை தடுத்துவைத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்துகொண்ட 5 மாணவிகளே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
புலமை பரிசில் பரீட்சை செயலமர்வு நிறைவடைந்த நிலையில், 10 வயதான 5 மாணவிகள் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், மாணவிகளை இடைமறித்து தடுத்து வைத்துள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த மாணவி ஒருவர் மீது, இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவிகள் வீடு திரும்பாததை அடுத்து, மாணவி ஒருவரின் தந்தை தேடி சென்ற போது, மாணவிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்து இளைஞர்களிடமிருந்து மாணவிகளை மீட்டுள்ளார்.
இதன்போது மாணவிகளை தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞர்கள், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளைஞர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவிகள் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக பரவிய செய்தி, உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.