இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்- சீவிகே சிவஞானம்

இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான உரிமை கொடுத்துள்ள செயலானது, மிக மிக பாராட்டத்தக்க விடயம் என தெரிவித்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சீவிகே சிவஞானம் , அவர்களுக்கான குடியுரிமையை விரைவில் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவிற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பும் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த செயலானது மிகவும் பாராட்டத்தக்கது.

இதுவரை காலமும் எந்த அரசாங்கமும் செய்யாத காரியத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்துள்ளார்

அத்துடன், இலங்கை மக்களை அகதிகள் என்ற பெயரால் அழைக்க கூடாது எனவும், மையம் அல்லது மன்றம் என்ற அவ்வாறான வார்த்தையை பிரயோகிம்படி, முன்னேற்றகரமாக நமது மக்களுக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இலங்கை மக்களுக்கான வீட்டுத் திட்டம், குடிநீர் வசதி, மலசல கூட வசதி போன்றவற்றை மு.க. ஸ்டாலின் தான் முதன் முதலில் செய்துள்ளார்.

மேலும், மு.க. ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றும் போது ‘நீங்கள் அகதிகள் இல்லை உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம்’ என்ற கருத்தை தெளிவாக பாராட்ட கூடிய வகையில் முன்வைத்துள்ளார்.

அதே நேரம், அங்குள்ள பல இலங்கையர்கள் தாம் தமிழகத்தில் தொடர்ந்து இருப்பதற்கே ஆர்வம் கொண்டுள்ளனர்.எனவே இது அவர்களின் விருப்பம். இதற்கான குடியுரிமை சம்பந்தமான வேலைகளையும் தமிழக அரசு ஏற்படுத்தித் தருவதாக நம்புகின்றோம்.

அத்துடன், எங்களுடைய இடப்பெயர்வு காலத்திற்கு பிறகு இவ்வாறான உரிமையை வழங்கிய தமிழக அரசு மற்றும் ஆதரவளித்த கட்சிகள் அனைத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

சர்வதேசத்தைப் பொறுத்த வரையில், முதன்முறையாக நாங்களும் இருக்கின்றோம் என இலங்கை மீது இந்தியா கொண்டுள்ள அக்கறையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தின் தொய்வு காரணமாகவே கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார தாக்கத்தை விட மக்களின் வாழ்க்கைச் செலவு மிகவும் உயர்ந்துள்ளது. இவற்றிற்கு ஈடுகட்ட முடியாத நிலையில் இந்த அரசாங்கம் பின்னடைந்து ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

தற்போது அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. அதிலும் சீனியின் விலை 250/= கடந்துள்ள நிலையில், அவற்றை கொள்முதல் செய்வதற்கான டொலர் இந்த அரசாங்கத்திடம் கையிருப்பில் இல்லை எனவும் தெரிவித்தார்.

டொலர் இல்லாத காரணத்தினால் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கடன் கேட்டு நிற்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *