மலையக மக்களுக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இராதாகிருஸ்ணன் கோரிக்கை…!

மலையக மக்களுக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
நேற்றையதினம்(12)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனவரி மாதம் 10 ஆம் திகதியை மலையக தொழிற்சங்க தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை பாராளுமன்றத்தில் முன்மொழிந்து ஒரு பிரேரணையாக முன்வைத்தார்.
அதனை நான் எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக வழி மொழிந்து உரையாற்றினேன், உண்மையில் இந்த நாள் எனது பாராளுமன்ற வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று .
இதனை அங்கீகரித்து எங்களுடைய மக்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் எங்களுடைய மலையக மக்கள் தங்களுடைய உயிரை பல கட்டங்களிலும் தியாகம் செய்திருக்கின்றார்கள். அதனுடைய வரலாறு மிகவும் பழமையானது. அவர்கள் செய்த உயிர் தியாகங்களின் அடிப்படையிலேயே நாம் பல வெற்றிகளை அகிம்சை வழியில் போராடி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இலங்கையில் தொழிற்சங்க வரலாற்றில் சுமார் 34 பேர் மலையக தியாகிகளாக குறிப்பிடப்படுகின்றார்கள். குறிப்பாக தனியே தமிழர்கள் மாத்திரம் அல்லாது இந்த தியாகிகள் பட்டியலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்கள சகோதரர்களும் இருக்கின்றார்கள்.
எனவே எங்களுடைய போராட்டமானது அன்று முதல் இன்று வரை இலங்கையர்களாகவே போராடியிருக்கின்ளோம். இதனை அரசாங்கம் அங்கீகரித்து எங்களுடைய மக்களுக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
இந்த பிரேரணையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மலையக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நபர் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக அமைவது பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தலைமையிலான எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி என்று சொன்னால் அது மிகையாகாது  எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *