ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா அனர்த்தம் காரணமாக அமுலிலுள்ள முடக்கத்துடனான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறி வீதிகளில் பயணித்தோர், முறையாக முகக்கவசம் அணியாதோருக்கு வீதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
அந்தவகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் ஓட்டமாவடி பிரதேசங்களில் தேவையின்றி வீதிகளில் பயணம் செய்த ஐம்பத்தி மூன்று நபர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் வழிகாட்டலில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற பரிசோதனைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதக பயிலுனர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார், இராணுவத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.







