வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றுவதில் தாமதம்- சுகாதார திணைக்களம் காரணமா?

வவுனியாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையில் சுகாதார திணைக்களம் இதற்கு காரணமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதம் முதலாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டோர் என இரு தடவைகளில் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இம் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டியிருந்தது.

எனினும் குறித்த தடுப்பூசிகள் இதுவரை வவுனியாவிற்கு கிடைக்காத நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் பெற வேண்டியவர்கள் விசனம் அடைந்துள்ளனர்.

மேலும் இரண்டாம் கட்ட தடுப்பூசியை குறித்த காலப்பகுதியில் பெறாமையினால் தமக்கு தடுப்பூசியின் பயன் கிடைக்காமல் போய் விடுமா எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

எனினும் இந்நிலையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பித்த காலத்திலும் முதலாவது தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கு இறுதியாகவே கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா சுகாதார திணைக்களம் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்தமே காரணம் என விமர்சனம் ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் மிகவும் தாமதமாகவே பெற வேண்டிய நிலை வவுனியா மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான நிலைமைக்கு சுகாதார திணைக்களத்தின் அசமந்தமும் , அரசியல்வாதிகளின் அக்கறையின்மையுமே காரணமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை அண்மையில் கடற்றொழில் அமைச்சரிடம் 16 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட போதிலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் ஏன் எனவும் வவுனியா வாழ் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *