யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் சித்த மருத்துவ பீடம்…!

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்ற சித்த மருத்துவ கற்கைகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் மத்தியில் சுதேச மருத்துவம் தொடர்பான நல்லபிப்பிராயம் காணப்படுவதுடன், மாணவர்கள் மத்தியிலும் சுதேச மருத்துவத்தினை தெரிவு செய்வதில் அண்மைக் காலத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கி வருகின்ற சித்த மருத்துவ கற்கைநெறிகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்தி வளங்களை அதிகரிப்பதன் மூலம், எமது பிரதேசங்களில் தரமான சுதேச மருத்துவ பாரம்பரியத்தை கட்டமைக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டியிருந்தார். 

கடற்றொழில் அமைச்சரின் கருத்து அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதனால், தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்த கல்வி அமைச்சு, ஏற்கனவே கிழக்கு பல்கலைகழகத்தில் சித்த மருத்துவ பீடத்தினை ஆரம்பித்திருந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த சித்த மருத்துவ அலகினையும் தனியான பீடமாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *