வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுன்னாகம் பொலிசார்; துப்பாக்கிகளுடன் வந்து மிரட்டல்- குடும்ப பெண் குற்றச்சாட்டு..!

சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனது கணவர் கடுமையாக தாக்கப்பட்டு உடல் ரீதியாகபாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவருக்கு நீதி பெற்று தருமாறு அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(02)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் யாழ் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு 11 மணியளவில் சுன்னாம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் திருடர்கள் போல் மதில் ஏறி பாய்ந்து எமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சப்பாத்து கால்கலால் கதவுகளை உதைந்து எனது கணவரை பெயர் கூறி அழைத்தார்கள்.

கணவன் அங்கு வந்தபோது அவரின் கன்னத்தில் அடித்து துப்பாக்கி காட்டி மிரட்டி சப்பாத்து கால்களால் தாக்கினார்கள்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகளிடம் ஏன் எனது கணவனை அடிக்கின்றீர்கள் என நான் கேட்டபோது எங்களுக்கும் துப்பாக்கியால் தாக்க வந்ததுடன் வீட்டிலிருந்த அண்ணன் அண்ணி பெறாமகள் ஆகியோரை கெட்ட வார்த்தைகளால் பேசி அவர்களை தாக்க முற்பட்டதுடன் எனது கணவனின் பெறாமகளின் தொலைபேசியை  பறித்து நீ வீடியோ எடுக்கின்றாய் என தெரிவித்து தொலைபேசியை அடித்து உடைக்க முற்பட்டார்கள்.

இந்நிலையில் உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை தந்தது என வீட்டிலிருந்தவர்கள் பொலிஸ் அதிகாரிகளை கேட்க அந்த ஆத்திரத்தை கணவன் மீது திணித்தார்கள்.

அதேவேளை நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காது என்னை துப்பாக்கி காட்டி மிரட்டினார்கள்.

அதேவேளை ஏன் கணவரை கைது செய்கின்றீர்கள் என நான் கேட்டபோதும் கணவனை தாக்கி சப்பாத்து கால்களால் தாக்கி இழுத்துகொண்டு போனார்கள்.

இந்நிலையில், கணவனை தாக்கி வீட்டிற்கு வெளியே நின்ற முச்சக்கர வண்டிக்குள் ஏற்றியதுடன் அவரின் கண்களையும் கட்டிவிட்டு வழியிலே நாங்கள் இவரை கைது செய்துள்ளோம் என்று கூறினார்கள்.

இதேவேளை அவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கே சிறையில் அடைத்தார்கள்.

இந்நிலையில் நாம் அங்கு சென்று கைதுக்கான காரணத்தை விசாரித்தபோது அவர் மீது இதுவரை எவ்வித வழக்குகளும் போடவில்லை எனவும் சந்தேகத்தின் பேரிலேயே தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

 அடுத்த நாள் காலை மீண்டும் நாம் பொலிஸ் நிலையம் சென்ற போது அவரை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனயைடுத்து DGI பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு இது தொடர்பில் முறையிட்டோம்.

DGI உடனடியாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொலைபேசியில்  கேட்டார்.

அதேவேளை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலிருந்த எனது கணவரை  முட்டுக்காலில் இருக்கவிட்டு உடலில் கடுமையாக தாக்கியதுடன் கோடாளியை வைத்து மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசினார்கள்.

இந்நிலையில் பொலிஸாரின் கடுமையான தாக்குதலால் கணவனின் உடலில் கண்டல் காயங்கள் ஏற்பட்டதுடன் நடக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை உணவு உண்ண முடியாத நிலையில் நீர் ஆகாரங்களை மட்டுமே அருந்தி வருகின்றார்.

இந்நிலையில் அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்திற்கு எமக்கு நீதி வேண்டும். இனியும் எம்மால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து கணவனுக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *