வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இன்று(04) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த இடத்தில் வலது பக்கத்தில் உள்ள கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் சாரதியும், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்து தலைக்கவசம் இன்றி பயணித்த முதியவரும் காயமடைந்தனர்.
முதியவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.